டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார்–பறக்கை ரோடு சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதற்கு முதலிலேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்பகுதி மக்கள் இந்த மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று முன்னாள் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் இசங்கன்விளை, வட்டவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பெண்கள் ஆவர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த பகுதியில் திறக்கப்பட்டிருக்கும் மதுபான கடையால் நாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். பெண்கள், மாணவ–மாணவிகள் இந்த கடை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது மேலும் ஒரு கடையை அதிகாரிகள் திறந்திருப்பது எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த கடையை உடனடியாக மூடவேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீசார், போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள் என்றனர். அதன்படி போராட்டத்தை கைவிட்ட அவர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story