குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 19 Feb 2020 8:40 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை ஏராளமான முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.

நாகர்கோவில், 

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஜமாத்துல் உலமா பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட ஜமாத்துல் உலமா பேரவை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்துக்கு பேரவை துணை தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். பொருளாளர் ஷாஜகான் ஜலாலி, துணைச் செயலாளர் சுல்தான் அகமது பையாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தில் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் லத்தீப், செயலாளர் கான், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது, மாவட்ட செயலாளர் செய்யது, பொருளாளர் நவாஸ், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த உவைஸ், சிறுபான்மை அமைப்பை சேர்ந்த மீரான் மைதீன், முஸ்லிம் லீக் அப்துல் ரசாக் மற்றும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜமாத்துல் உலமா பேரவை பொதுச்செயலாளர் சைனுலாபிதீன் மக்லரி நன்றி கூறினார்.

இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் தலைமை இமாம்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்– சிறுமிகள் என ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். சிலர் கைக்குழந்தைகளுடனும் கலந்து கொண்டனர். வெயில் கடுமையாக இருந்ததால் இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் குடைகளை பிடித்தபடி நின்றிருந்தனர். நீளமான தேசியகொடியையும் தூக்கி வைத்திருந்தனர்.

போராட்டத்தையொட்டி காலை 10.45 மணி முதல் 12 மணி வரை 1¼ மணி நேரம் கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணிக்காக கலெக்டர் அலுவலக முன்புற வாயில், பின்புற வாயில் என அனைத்து பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், உதவி சூப்பிரண்டு ஜவகர் மற்றும் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார் என ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வஜ்ரா வாகனம், கலவரத்தின்போது கூட்டத்தை கலைக்க போலீசார் பயன்படுத்தும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம், கைது செய்து அழைத்துச் செல்வதற்காக ஏராளமான போலீஸ் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

போராட்டத்தின் முடிவில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதன் பிறகு முற்றுகையில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story