அம்பை தாலுகாவில் நீடிக்க கோரி தென்காசி கலெக்டர் அலுவலகத்தை அடைச்சாணி கிராமமக்கள் முற்றுகை
அடைச்சாணி கிராம பொதுமக்கள் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி,
அம்பை தாலுகாவில் நீடிக்க கோரி, அடைச்சாணி கிராம பொதுமக்கள் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம்
நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவானது. இந்த பிரிவினையில் அம்பை தாலுகாவில் உள்ள சில பகுதிகள் தென்காசி தாலுகாவில் சேர்க்கப்பட்டன. இதில் சில கிராமங்களை மீண்டும் அம்பை தாலுகாவிலயே நீடிக்க செய்யப்பட்டது. ஆனால் அடைச்சாணி கிராமத்தை மட்டும் தென்காசி தாலுகாவில் சேர்த்தனர். இதனால் தங்களுக்கு மிகுந்த பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி, அம்பை தாலுகாவிலேயே நீடிக்க கோரி இந்த கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
இந்தநிலையில் நேற்று மாலை அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் சிலரை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அழைத்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதை தொடர்ந்து அவர்கள் வெளியே வந்தனர். பின்னர் கிராம மக்கள் கூறியதாவது:–
நேற்று முன்தினம் நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தயார் ஆனோம். அதிகாரிகள் எங்களை சமரசம் செய்தனர். அதனால் போராட்டத்தை கைவிட்டோம். இன்று மாலை (அதாவது நேற்று) எங்களை மாவட்ட கலெக்டர் சந்திப்பதாக அதிகாரிகள் கூறினர். அதன் பேரில் இங்கு வந்தோம். ஆனால் 5 பேரை மட்டும் மாவட்ட கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் இதுகுறித்து மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். நான் ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். எங்களுக்கு இதில் உடன்பாடு இல்லை.
தொடர் போராட்டம்
சுமார் 4 கி.மீ. தூரத்திலுள்ள அம்பையில் தான் இதுவரை எல்லாப் பணிகளுக்கும் சென்று வந்தோம். இப்பொழுது 50 கி.மீ. தூரத்தில் தென்காசிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இனி ரேஷன் கடைகளில் இனி பொருட்களை வாங்க மாட்டோம். ஆதார் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டுமொத்தமாக ஒப்படைப்போம். வர இருக்கிற அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story