குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வேலூர்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வேலூர் மாவட்ட ஜமாத்உலமா சார்பில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆஞ்சநேயர் கோவில் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாத்உலமா வேலூர் மாவட்ட தலைவர் இம்தியாஸ் அகமது தலைமை தாங்கினார். குனங்குடி அனீபா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போலீஸ் அனுமதி தராததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க., திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், துரைபாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story