குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு, ஜமாத்துல் உலமா சபையினர் முற்றுகை போராட்டம்
ஐக்கிய ஜமாத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
மாவட்ட ஐக்கிய ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய தடியடி சம்பவத்தை கண்டித்தும் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் டி-பிளாக் பஸ் நிறுத்தம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு கோஷமிட்டபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர். போராட்டத்துக்கு மாவட்ட ஐக்கிய ஜமாத்துல் உலமா சபை தலைவர் அகமது இப்ராகிம் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது சலாகுதீன் அன்சாரி முன்னிலை வகித்தார்.
இதில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி பரக்கத்துல்லா, சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் முருகபூபதி, தி.மு.க. நகர் செயலாளர் கார்மேகம், தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்முருகன், பெரியார் பேரவை நிர்வாகி நாகேசுவரன், சி.பி.ஐ. விவசாய பிரிவு செயலாளர் முத்துராமு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொது செயலாளர் அசன்அலி, மனித நேய மக்கள் கட்சி இக்பால், அ.ம.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம் மற்றும் த.மு.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியவாறு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரியும் கோஷமிட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
முன்னதாக அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் காரணமாக வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக பயணிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story