சாலையோரம் வசிப்பவர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடியில் இரவு நேர காப்பகங்கள் சென்னை மாநகராட்சி திட்டம்
சாலையோரங்களில் வசிப்பவர்கள் தங்குவதற்காக ரூ.3 கோடியில் இரவு நேர காப்பகம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சாலை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவர்களுக்காக மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 51 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பெண் குழந்தைகளுக்கு 3 காப்பகங்கள், ஆண் குழந்தைகளுக்கு 5 காப்பகங்கள், ஆண் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 1 காப்பகம், பெண்களுக்கு 9 காப்பகங்கள், ஆண்களுக்கு 12 காப்பகங்கள், இருபாலருக்கும் 1 காப்பகம், வயதான ஆண், பெண்களுக்கு 2 காப்பகங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 4 காப்பகங்கள், ஆண் மற்றும் பெண்களுக்கு 13 சிறப்பு காப்பகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 என மொத்தம் 51 காப்பகங்களில் 1,879 பேர் தங்கி உள்ளனர்.
இரவு நேர காப்பகங்கள்
சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட்டு, மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசிக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையிலும் சாலைகள் மற்றும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை மீட்கும் வகையில், மாநகராட்சி சார்பில் ரூ.51 லட்சம் மதிப்பில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னையில் தலா 1 சிறப்பு வாகனம் வீதம் 3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சாலை மற்றும் தெருவோரங்களில் இருந்து மீட்கப்படுவோரை தங்க வைக்கும் வகையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம் ஆகிய 3 மண்டலங்களில் ரூ.1.88 கோடி மதிப்பில் தலா ஒரு இரவு நேர காப்பகங்களும், தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பெரிய தெரு மற்றும் தியாகராயநகர் கிரியப்ப சாலையில் ரூ.1.24 கோடி மதிப்பில் இரண்டு இரவு நேர காப்பகங்கள் என மொத்தம் ரூ.3.12 கோடி மதிப்பில் 5 காப்பகங்கள் கட்டப்பட உள்ளன.
கட்டுமான பணிகள் எப்போது?
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஏற்கனவே 33 இரவு நேர காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 8 காப்பகங்களின் கட்டுமானப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக தற்போது 4 மண்டலங்களில் ரூ.3.12 கோடி மதிப்பில் 5 இரவு நேர காப்பகங்கள் கட்டத்திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story