திருவள்ளூர் அருகே துணிகரம் அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 59 பவுன் நகை கொள்ளை துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை


திருவள்ளூர் அருகே துணிகரம்   அ.தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் 59 பவுன் நகை கொள்ளை   துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 20 Feb 2020 4:15 AM IST (Updated: 20 Feb 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 59¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் விஜி (வயது 39). இவர் பூண்டி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வின் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் விஜியின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இதையடுத்து விஜி துக்கநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தாருடன் சென்று விட்டார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு சரியாக பூட்ட முடியாததால், முன்பக்க கதவை மட்டும் பூட்டிவிட்டு சென்றார்.

நகைகள் கொள்ளை

அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பின்பக்க கதவின் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 59¾ பவுன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விஜி புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடையங்களை சேகரித்துச் சென்றனர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story