சூளைகளில் அதிகாரிகள் ஆய்வை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட செங்கல் உற்பத்தியாளர்கள்
திருவள்ளூரில் செங்கல் சூளைகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து சூளை உரிமையாளர்களை கைது செய்வதை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை செங்கல் உற்பத்தியாளர்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அனுமதியின்றி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
நாங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் அறுக்கும் தொழில் செய்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் 500 செங்கல் சூளைகள் உள்ளது. இதை நம்பி 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
மன உளைச்சல்
ஆனால் கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் அடிக்கடி செங்கல் சூளைகளுக்கு வந்து, அங்குள்ள தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குவதாக கூறி சூளை உரிமையாளர்களை கைது செய்கின்றனர்.
இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டு நாங்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.
அரசு அனுமதி பெற்று முறையாக நடத்தி வரும் சூளைகளுக்கு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.
புகார் மனு
இவ்வாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் மாவட்டத்தில் உள்ள செங்கல் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு செங்கல் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்து உள்ளோம்.
எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட வந்ததுள்ளோம்
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story