தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 300 மாணவர்கள் பங்கேற்பு


தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி 300 மாணவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2020 5:00 AM IST (Updated: 20 Feb 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்ட அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி தஞ்சையில் நடந்தது. இதில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் சீராளன் தலைமை தாங்கினார். தஞ்சை ஆயர் இல்ல வேந்தர் ஜான்சக்கிரியாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி இயக்குனர் ராஜேந்திரன் போட்டிகளை தொடங்கிவைத்தார்.

இதில் 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டப்போட்டி, 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இது தவிர குழு போட்டிகளாக கைப்பந்து, பூப்பந்து போட்டிகளும் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பரிசளிப்பு விழா

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு தஞ்சைமாவட்ட விளையாட்டு அதிகாரி ஆண்டனிஅதிர்‌‌ஷ்டராஜ் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை புனித சேவியர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரும், ஒருங்கிணைப்பாளருமான ராபர்ட் கென்னடி, பயிற்சி அலுவலர் ஆரோக்கியராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். 

Next Story