முறைகேடு புகார்களால் புதிய தரவரிசை பட்டியல்படி குரூப்-4 பணியிடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது


முறைகேடு புகார்களால் புதிய தரவரிசை பட்டியல்படி குரூப்-4 பணியிடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 20 Feb 2020 4:30 AM IST (Updated: 20 Feb 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

முறைகேடு புகார்களைத் தொடர்ந்து புதிய தர வரிசை பட்டியல்படி குரூப்-4 பணிடங்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) 4 ஆயிரத்து 894 இளநிலை உதவியாளர், 608 கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), 505 நில அளவையாளர், 2 ஆயிரத்து 840 தட்டச்சர், 1,035 சுருக்கெழுத்தர் போன்ற குரூப்-4 பணியிடங்களில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 882 இடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 1-ந்தேதி நடத்தியது.

தேர்வு முடிவு நவம்பர் மாதம் 12-ந்தேதி வெளியானது.

முறைகேடு

இந்த தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தி, தேர்வில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் அந்த தேர்வு ரத்து செய்யப்படுமோ? என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களின் பெயரை மட்டும் பட்டியலில் இருந்து நீக்கி புதிய தரவரிசை பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. தயாரித்து வெளியிட்டது.

கலந்தாய்வு தொடங்கியது

இதன் தொடர்ச்சியாக பட்டியலில் இடம்பெற்று இருந்தவர்கள் எடுத்த மதிப்பெண், தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

முதற்கட்டமாக இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர் ஆகிய இடங்களுக்கான கலந்தாய்வுக்கு 11 ஆயிரத்து 138 பேர் அழைக்கப்பட்டு இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 250 பேர் வீதம் இந்த பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களும், தேர்வர்களின் அசல் சான்றிதழ்களும் சரியாக உள்ளதா? என சரிபார்க்கப்பட்டு, பின்னர் கலந்தாய்வில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Next Story