குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Feb 2020 3:45 AM IST (Updated: 20 Feb 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை எதிர்த்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், முஸ்லிம் அமைப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் இந்த 3 சட்டங்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 3 சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு தீர்மானம் நிறைவேற்றக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையினர் முற்றுகையிட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக நேற்று காலை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேரிகார்டு மூலம் தடுப்புவேலி அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானம் முன்பு நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று அதே சாலையில் உள்ள கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் 5 பேரை மட்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச் சென்றார். அதன்பிறகு கலெக்டரிடம் மனு கொடுத்த முஸ்லிம் நிர்வாகிகள் மற்றும் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story