மங்களூரு வன்முறைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் சட்டசபையில் தினேஷ் குண்டுராவ் பேச்சு


மங்களூரு வன்முறைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் சட்டசபையில் தினேஷ் குண்டுராவ் பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2020 3:20 AM IST (Updated: 20 Feb 2020 3:20 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு வன்முறைக்கு பொறுப்பேற்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தினார்.

பெங்களூரு

கர்நாடக சட்டசபையில் நேற்று மங்களூரு வன்முறை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்ேபாது போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது, “முன்பு மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ், பொறுமை இல்லாமல் ஆவேசமாக பேசியதால் தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி, துணை போலீஸ் சூப்பிரண்டு கணபதி ஆகியோரின் தற்கொலை விவகாரங்களில் சிக்கினார்” என்றார்.

அப்போது கே.ஜே.ஜார்ஜ் எழுந்து, “பா.ஜனதாவினர் ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டையும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள். டி.கே.ரவி தற்கொலையில் அப்போது சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி கொடுத்த அறிக்கையை பா.ஜனதாவினர் ஏற்கவில்லை. அதன்பிறகு சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி அது தற்கொலை தான் என்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் சி.ஐ.டி. போலீசார் கூறிய அம்சங்களே இடம் பெற்றிருந்தன. அதை பா.ஜனதாவினர் ஏற்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும்போது போலீசாரின் செயலை ஏற்க மறுக்கும் பா.ஜனதாவினர், ஆளுங்கட்சியில் இருக்கும்போது அதை ஒப்புக்கொள்கிறார்கள்” என்றார்.

ராஜினாமா செய்ய வேண்டும்

அப்போது மந்திரி பசவராஜ் பொம்மை, “நாங்கள் இப்போது சி.ஐ.டி. விசாரணை அறிக்கையை ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் தினேஷ் குண்டுராவ், “நீங்கள் அந்த அறிக்கையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை. பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தியதால் மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்தார். இப்போது மங்களூரு வன்முறைக்கு யார் பொறுப்பேற்க போகிறீர்கள். போலீஸ் மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.

Next Story