ஜாமீனை ரத்து செய்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை நித்யானந்தா சாமியாருக்கு பிடிவாரண்டு ராமநகர் கோர்ட்டு அதிரடி உத்தரவு


ஜாமீனை ரத்து செய்தும் கோர்ட்டில் ஆஜராகவில்லை   நித்யானந்தா சாமியாருக்கு பிடிவாரண்டு   ராமநகர் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2020 3:26 AM IST (Updated: 20 Feb 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில் கோர்ட்டில் ஆஜராகாத நித்யானந்தா சாமியாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநகர் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு, 

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் உள்ளது. அவர் மீது பெண் சீடர் ஆரத்திராவ் கொடுத்த பாலியல் வழக்கு ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே நித்யானந்தா சாமியாரை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் கைது செய்து ராமநகர் சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் இந்த வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை ெதாடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். இதற்கிடையில், ஆரத்திராவ் கொடுத்த பாலியல் வழக்கில் ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நித்யானந்தா சாமியார் 2 ஆண்டுக்கும் மேலாக ஆஜராகாமல் இருந்து வந்தார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் அவர், ராமநகர் மாவட்ட கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க கர்நாடக ஐகோர்ட்டும் விலக்கு அளித்திருந்தது. ஆனால் சமீபத்தில் நித்யானந்தா சாமியாரிடம் கார் டிரைவராக இருந்த லெனின் கருப்பன், கர்நாடக ஐகோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதாவது ராமநகர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு நித்யானந்தா சாமியார் ஆஜராகாமல் இருப்பதால், இந்த வழக்கை ராமநகரில் இருந்து பெங்களூரு அல்லது வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மற்றொரு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு

இதில், நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, கடந்த 5-ந் தேதி அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதுபோல, நித்யானந்தா சாமியார் மீது ராமநகர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வரும் பாலியல் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டதுடன், லெனின் கருப்பன் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த 17-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், நித்யானந்தா சாமியார் மீதான பாலியல் வழக்கு ராமநகர் மாவட்ட கோா்ட்டில் நீதிபதி சித்தலிங்க பிரபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் ரகு ஆஜராகி வாதாடினார். அப்போது சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஆஜரான போலீசார், கர்நாடக ஐகோர்ட்டு நித்யானந்தா சாமியாரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதற்கான ஆவணங்களை நீதிபதியிடம் வழங்கினார்கள். பின்னர் அரசு தரப்பு வக்கீல் ரகு வாதாடுகையில், நித்யானந்தா சாமியாருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீனை கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 5-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டு இருப்பதாகவும், அதனால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார். இதற்கு நித்யானந்தா சாமியார் தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

நித்யானந்தாவுக்கு பிடிவாரண்டு

பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சித்தலிங்க பிரபு, கர்நாடக ஐகோர்ட்டு நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்திருப்பதால், அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பதாகவும், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் சி.ஐ.டி. போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நித்யானந்தா சாமியாரை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

ரெட் கார்னர் நோட்டீசு

ஏற்கனவே நித்யானந்தாவை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் மத்திய அரசின் மூலமாக புளூ கார்னர் நோட்டீசு பிறப்பித்திருந்தனர். தற்போது ராமநகர் மாவட்ட கோர்ட்டும் நித்யானந்தா சாமியாரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாலும், அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுவதாலும், மத்திய அரசின் மூலமாக சர்வதேச போலீசாரின் உதவியை நாட நித்யானந்தாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசு பிறப்பிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Next Story