கடலூரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி - 2,500 பேர் கைது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடலூரில் முஸ்லிம் அமைப்பினர் பேரணி நடத்தினர். இதையடுத்து அனுமதியின்றி பேரணி சென்றதாக கூறி 2 ஆயிரத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், அந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக முஸ்லிம் அமைப்பினர் அறிவித்து இருந்தனர்.
இதன்படி நேற்று கடலூர் அண்ணா பாலம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி செல்வதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த பகுதியில் திரண்டனர்.
பின்னர் அனைவரும் ஜவான்பவன் சாலையில் நீண்ட வரிசையில் நின்றனர். தொடர்ந்து பேரணி தொடங்கியது. இந்த பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக புறப்பட்டு வந்தது. பேரணியில் கலந்து கொண்ட முஸ்லிம் அமைப்பினர் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி, குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷமிட்டபடி சென்றனர்.
அவர்கள் சில்வர் பீச் ரோடு சிக்னல் அருகே உள்ள திருமண மண்டபம் அருகில் சென்றதும், அவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போதும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டபடி இருந்தனர்.
இதையடுத்து ஜமாத் நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகம் வரை சென்று, கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு அனுமதி தர முடியாது என்று போலீசார் மறுத்தனர். மேலும் அனுமதியின்றி பேரணியாக வந்தவர்களை கைது செய்தனர்.
அதில் சிலர் திருமண மண்டபத்திற்கு வெளியே பாரதிசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட படி தொடர்ந்து கோஷமிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 2,500 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதான அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இந்த பேரணியால் அண்ணா பாலம், பாரதிசாலை, நெல்லிக்குப்பம் சாலை, இம்பீரியல் ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து மாற்றி விடப்பட்ட இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.
பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் முன்னிலையில் 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கலவரம் ஏதேனும் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்திடும் வகையில் வஜ்ரா, வருண் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக பேரணி அண்ணா பாலத்தில் இருந்து பாரதி சாலை நோக்கி சென்ற போது, எதிரே ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சை பார்த்ததும் பேரணியில் வந்தவர்களும், வாகன ஓட்டிகளும் வழிவிட்டனர். இதனால் எளிதில் ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்து செல்ல முடிந்தது.
Related Tags :
Next Story