சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான 15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்? தொல்லியல் துறையினர் ஆய்வு
சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லிலான15 அடி உயர நந்தி சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா ? என தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மைசூரு,
மைசூரு டவுனில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் சாமுண்டிமலை அமைந்துள்ளது. இந்த மலையில் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சாமுண்டிமலை அடிவாரத்தில் இருந்து 1,008 படிக்கட்டுகள் வழியாக இக்கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லலாம். மேலும் தற்போது அடிவாரத்தில் இருந்து மலை மீதுள்ள கோவில் வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு, வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சாமுண்டிமலை கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் சுமார் 500-வது படிக்கட்டில் பிரமாண்ட நந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,489 அடி உயரத்தில் இந்த சிலை உள்ளது. இது மறைந்த மைசூரு மன்னர் தொட்ட தேவராஜ உடையார் ஆட்சியில் 1659-1673-ம் ஆண்டு காலக்கட்டத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.
15 அடி உயர நந்தி சிலையில் விரிசல்?
ஒரே கருப்பு நிற கிரானைட் கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த நந்தி சிலையின் உயரம் 15 அடி ஆகும். அதன் அகலம் 24 அடி ஆகும். இந்த நந்தி மகாநந்தி என்று பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த மகாநந்தி சிலை நிறுவப்பட்டு சுமார் 350 ஆண்டுகள் ஆகிறது. அந்த சிலை வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது நந்தி சிலையில் கால், முகம், பாதம் ஆகிய பகுதிகளில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் நந்தி சிலையை பழமைமாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அதுபோல் பல்வேறு அமைப்பினரும் நந்தி சிலையை புதுப்பிக்க வலியுறுத்தினர்.
தொல்லியல் துறையினர் ஆய்வு
இதைதொடர்ந்து மைசூரு மாவட்ட நிர்வாகம், நந்தி சிலையை ஆய்வு செய்ய சிறந்த தொல்லியல் துறை அதிகாரிகள், சிற்பிகள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவினர் சாமுண்டிமலையில் உள்ள நந்தி சிலை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அந்த குழுவில் இருந்த ஒரு அதிகாரி கூறுகையில், நந்தி சிலையில் விரிசல்கள் இல்லை. அது கல்லின் இயற்கை தன்மையின் வெளிப்பாடு என்றார். இந்த குழுவினர் இந்த ஆய்வு அறிக்கையை விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க உள்ளனர். ஒரு வேளை ஆய்வு அறிக்கையில் நந்தி சிலையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறியிருந்தால், மாவட்ட நிர்வாகம் அதனை சரி செய்ய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story