மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விவாதம்: பா.ஜனதா-காங். உறுப்பினர்கள் கடும் மோதல் சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்
மங்களூரு துப்பாக்கி சூடு குறித்த விவாதத்தின்போது, சட்டசபையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் சபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்ெதாடர் பெங்களூரு விதான சவுதாவில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. துப்பாக்கி சூடு
முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டு கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மத்திய அரசு கொண்டு வந்த குடி யுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவாதிக்க விதி எண் 69-ன் கீழ் சபாநாயகர் காகேரி அனுமதி வழங்கினார்.
இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பங்கேற்று பேசியதாவது:-
144 தடை உத்தரவு
முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடைபெறுகிறது. ஆனால் பெரும்பாலான மந்திரிகள் இல்லை. நான் எப்படி பேசுவது?. மக்கள் அமைதியான முறையில் நடத்தும் போராட்டங்களை அரசால் ஒடுக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எத்தகைய சூழ்நிலையில் இந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது.
அங்கு தடை உத்தரவு பிறப்பித்த போலீஸ் அதிகாரிகளுக்கு இதுபற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அமைதியான வழியில் போராட்டம் நடத்தினால் அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. போராட்டம் நடத்துவது என்பது பொதுமக்களின் அடிப்படை உரிமை. தடை உத்தரவை பிறப்பிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதம் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
மாதுசாமி ஆட்சேபனை
அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி எழுந்து சித்தராமையாவின் இந்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு சித்தராமையா, ஐகோர்ட்டு தீர்ப்பு உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யுங்கள் என்றார்.
அதைத்தொடர்ந்து சித்தராமையா மீண்டும் பேசத்தொடங்கினார். அவர் பேசுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விஷயத்தில் முன்னாள் மந்திரி யு.டி.காதர் கருத்து தெரிவித்தார். அதை அமல்படுத்தினால் தீ வைப்பேன் என்று அவர் கூறவில்லை. கர்நாடகம் பற்றி எரியும் என்று கூறினார். தீ வைப்பேன் என்ற சொல்லிற்கும், பற்றி எரியும் என்ற சொல்லிற்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் அவரது கருத்தை பா.ஜனதாவினர் திரித்து கூற வேண்டாம். சுப்ரீம் கோர்ட்டு கூட வார்த்தைகளின் அர்த்தம் குறித்து தெளிவாக கூறியுள்ளது. அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது ஏன்?. தடியடி எந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்று அரசுக்கு தெரியாதா?’’ என்றார்.
ஆயுதங்கள் இல்லை
அப்போது பா.ஜனதா உறுப்பினர் சுனில்குமார் குறுக்கிட்டு, ‘‘போராட்டத்தில் முகத்திற்கு கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்தது யார்?’’ என்றார். சுனில்குமாரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய சித்தராமையா, ‘‘144 தடை உத்தரவு பிறப்பித்தது தவறு. யாருடைய அனுமதியை பெற்று போலீஸ் கமிஷனர் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ள னர். போராட்டம் நடத்தியவர்களிடம் எந்த பயங்கரமான ஆயுதமும் இல்லை. அவர்களை அப்பாவிகள் என்று அழைக்காமல் வேறு என்ன சொல்லி அழைப்பது?. இதை ஐகோர்ட்டே கூறியுள்ளது. ஐகோர்ட்டு, அரசை கண்டித்துள்ளது. துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்’’ என்று கூறி மங்களூருவில் நடந்த வன்முறை குறித்த புகைப்படங்களை காட்டினார்.
கடும் மோதல்
அதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் குரலை உயர்த்தி பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் உண்டாகி கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து யார் என்ன பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. இதனை தொடர்ந்து சபாநாயகர் காகேரி சபையை ஒத்திவைத்தார்.
சபை மீண்டும் கூடியபோது, சித்தராமையா பேசத்தொடங்கினார். அப்போது மந்திரி நாராயணகவுடா குறுக்கிட்டார். இதனால் கோபம் அடைந்த சித்தராமையா நாராயணகவுடாவை பார்த்து, “சட்டம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், இருக்கையில் அமருங்கள்” என்றார். இதற்கு சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி எழுந்து கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
அவர் பேசும்போது, “இந்த சபைக்கு சித்தராமையா அவமரியாதை செய்கிறார். இது சரியல்ல. நாங்கள் நோட்டீசு கொடுப்போம்” என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்ேபாது காங்கிரஸ் உறுப்பினர் பிரியங்க் கார்கே, ‘‘உங்களின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நீங்கள் என்ன நோட்டீசு கொடுக்கிறீர்களோ கொடுங்கள். மிரட்டுவதே உங்களின் தொழில்” என்றார்.
போலீஸ் கமிஷனரே காரணம்
பின்னர் சித்தராமையா பேசியதாவது:-
“போராட்டக்காரர்கள் மீது மங்களூருவில் போலீசார் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். கர்நாடகத்தில் இத்தகைய போலீஸ் ஆட்சி எப்போதும் இருந்தது இல்லை. இதே நிலை தொடர்ந்து நடைபெற்றால், அராஜகம் தலைதூக்கும். ஜனநாயகம் அழிந்துவிடும். போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு 2 அப்பாவிகள் மரணம் அடைந்ததற்கு யார் காரணம்?. தடியடி நடத்தக் கூடாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். ஆனால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது யார்?. போலீசார் முதல்-மந்திரியைவிட உயர்ந்தவர்களா?. மங்களூரு வன்முறைக்கு போலீசார் மற்றும் மாநில அரசு தான் காரணம்.
மங்களூரு போலீஸ் கமிஷனர், முன்னின்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அதனால் 2 அப்பாவிகளின் மரணத்திற்கு அவரே காரணம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் அறிவித்துவிட்டு பிறகு அதை வாபஸ் பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூடு குறித்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தேச துரோக வழக்கு
கல்லடுக்கா பிரபாகர் பட்டுக்கு சொந்தமான பள்ளியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து நாடகம் போட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு போடவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த சோமசேகரரெட்டி எம்.எல்.ஏ. மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் பீதரில் தனியார் பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற நாடகம் குறித்து தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சரியல்ல. இதை கண்டிக்கிறேன்.”
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story