சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழா: சிவ்னேரி கோட்டையை மேம்படுத்த ரூ.23 கோடி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சிவ்னேரி கோட்டையை மேம்படுத்த ரூ.23 கோடியை அறிவித்தார்.
மும்பை,
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த புனே மாவட்டம் ஜூன்னார் தாலுகாவில் உள்ள சிவ்னேரி கோட்டையில் நடந்த தொட்டில் நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டு சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசிய தாவது:-
ஏழை மக்கள் இது தங்கள் அரசாங்கம் என்று உணர்கிறார்கள். அதனால் தான் இந்த சிவ் ஜெயந்தி விழாவுக்கு மக்கள் அதிகளவில் வந்துள்ளார்கள். மன்னர் சத்ரபதி சிவாஜியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
சிவ்னேரி கோட்டையை மேம்படுத்துவதற்கு ரூ.23 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது.
வழக்குகள் திரும்ப பெறப்படும்
சத்ரபதி சிவாஜியின் கோட்டைகள் மற்றும் நினைவுச்சின்னங்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நானும், அஜித் பவாரும் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்வதற்காக ஒன்றிணைந்து உள்ளோம். நான் இலக்கை அடையும் வரை ஓய்வெடுக்க மாட்டேன் என சபதம் செய்கிறேன்.
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சத்ரபதி சிவாஜி பிறந்தநாளையொட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சத்ரபதி சிவாஜியின் துணிச்சலும், நிர்வாக சிறப்பும் ஒப்பிட முடியாதது என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
காங்கிரஸ் மந்திரிகள் அசோக் சவான், பாலசாகேப் தோரட், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் டுவிட்டரில் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story