பொருளாதாரம் வளர சுதேச சிந்தனை ஏற்பட வேண்டும் - ஈரோட்டில் த.வெள்ளையன் பேச்சு


பொருளாதாரம் வளர சுதேச சிந்தனை ஏற்பட வேண்டும் - ஈரோட்டில் த.வெள்ளையன் பேச்சு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 20 Feb 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரம் வளர சுதேச சிந்தனை ஏற்பட வேண்டும் என்று ஈரோட்டில் த.வெள்ளையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் சோசலிச சிந்தனையாளர் ஆச்சாரியா நரேந்திர தேவா நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:-

நாட்டில் சோசலிச சிந்தனை குறைந்ததால், மக்களிடம் எதிர்க்கும் தன்மை குறைந்தது. இதனால் ஊழல், முறைகேடு, அன்னிய ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் சோசலிச சிந்தனை தேவைப்படுகிறது. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரர்கள் வாணிபம் செய்ய இந்தியா வந்தனர். அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டார்கள். அதுபோல, தற்போது உலக மயம், தாராளமயம் என்ற பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழைந்துள்ளன.

ஒரு வேளை சாப்பாட்டையும் ஆன்லைனில் பதிவு செய்தவுடன், அன்னிய நிறுவனம் கொண்டு வந்து வழங்குகிறது. இது சிறிய கடைகளை அழித்துவிடும். சில ஆண்டுகளில் வெளிநாட்டவர் ஆட்சியின் கீழ் நாம் மீண்டும் வந்துவிடுவோம். எனவே சுதந்திர போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிவரும்.

இதை தவிர்க்க, மக்களிடம் சோசலிச சிந்தனை வளர வேண்டும். ஆன்லைன், அன்னிய பொருட்களை தவிர்த்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். எனவே பொருளாதாரம் வளர சுதேச சிந்தனை ஏற்பட வேண்டும்.

இதுபோன்ற மாற்றத்தை கொண்டுவர, ஆச்சாரியா நரேந்திர தேவா போன்றோரின் எண்ணங்களை, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story