திருப்பூரில் பரபரப்பு: 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி - தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடுகிறார்கள்


திருப்பூரில் பரபரப்பு: 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி - தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:15 PM GMT (Updated: 20 Feb 2020 12:03 AM GMT)

திருப்பூரில் 6-ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கடத்த முயன்றார். தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூர் காந்திநகரை அடுத்த லட்சுமி தியேட்டர் ரோடு சத்தியாநகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரின் 11 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி நேற்று மாலை வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று அந்த மாணவியின் வாயை பொத்தி தூக்கி செல்ல முயன்றான்.

உடனே அந்த மாணவி அந்த வாலிபரின் கைகளை கடித்தாள். இதனால் அந்த வாலிபர் கைகளை உதறினான். பிடி நழுவியவுடன் மாணவி அங்கிருந்து அலறியப்படியே வீட்டுக்குள் ஓடி வந்தாள். மகளின் அலறல் சத்தத்தை கேட்ட மாணவியின் தந்தை பதறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். அப்போது மாணவி அழுது கொண்டே அந்த வாலிபர் தன்னை தூக்கி செல்ல முயன்றதை கூறினாள்.

இதற்கிடையே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். உடனே மாணவியின் தந்தையும் அங்கிருந்து ஓடி வந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தார். பின்னர் மொபட்டில் ஏறு என்று அந்த வாலிபரை மிரட்டி ஏற வைத்தார். அதன்பின்னர் அந்த வாலிபருடன் மொபட்டில் ஏறி போலீஸ் நிலையம் செல்வதற்காக சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் அந்த வாலிபர் மொபட்டில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடி விட்டான்.. இதனால் மொபட்டுடன் மாணவியின் தந்தை கீழே விழுந்தார். நல்லவேளை இதில் லேசான காயத்துடன் அவர் தப்பினார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

அப்போது சிவப்பு கலர் சட்டை அணிந்த 25 வயது மதிக்கதக்க வாலிபர் சிறுமியை வாயை பொத்தி தூக்கி செல்வதும், சிறுமி தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் காணப்பட்டார். எனவே குழந்தைகளை கடத்தும் கும்பலை சேர்ந்தவரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த வாலிபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இந்த பகுதியில் 60 குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது சிறுமியை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் நடந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே போலீசார் இப்பகுதியில் கூடுதலாக ரோந்து சுற்றி கண்காணிக்க வேண்டும் என்றனர். 

Next Story