மதுரையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
மதுரையில் தொழிலாளர் துறையினர் நடத்திய ஆய்வில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மதுரை,
தொழிலாளர் இணை கமிஷனர் வேல்முருகன் உத்தரவுப்படி, குழந்தை தொழிலாளர்கள் மீட்பு இயக்கம் இந்த மாதம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக குழந்தைகள் மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர்கள் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் முழுவதும் தொழிலாளர் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தொழிலாளர் உதவி கமிஷனர் சதீஷ் குமார் தலைமையிலான தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில், செல்லூர் அகிம்சாபுரம் பகுதியில் உள்ள மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 13 வயது குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டார். இதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது மேற்கண்ட சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த குழுவினரின் ஆய்வில் இதுவரை 18 வயது பூர்த்தியடையாத 6 வளர் இளம்பருவ தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சைல்டு லைன் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story