சட்ட விரோத காவலில் வைத்து தாக்கியதால் டிரைவர் இறந்தாரா? தந்தை பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சட்ட விரோத காவலில் வைத்து தாக்கியதால் டிரைவர் இறந்தாரா? தந்தை பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2020 4:00 AM IST (Updated: 20 Feb 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

சட்ட விரோத காவலில் வைத்து தாக்கியதால்தான் டிரைவர் இறந்தாரா என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவரது தந்தைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவரது மகன் பாலமுருகன். டிரைவரான இவரை கடத்தல் வழக்கு ஒன்றில் அவனியாபுரம் போலீசார் கைது செய்து, சட்ட விரோத காவலில் வைத்து தாக்கியதாகவும், இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்ததாகவும், எனவே அவரது உடல் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், இதில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் முத்துக்கருப்பன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்றார்.இந்த நிலையில் பாலமுருகன் இறந்தது தொடர்பாக வக்கீல் ஹென்றி டிபேன், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், காவல்துறையினரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகவே முத்துகருப்பன் வழக்கை வாபஸ் பெற்றதாக கடிதத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக தெரிவித்தது. அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில், பாலமுருகன் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது முத்துக்கருப்பன் சார்பில் ஆஜரான வக்கீல், போலீசார் தாக்கியதால் பாலமுருகன் இறக்கவில்லை என்பதை அறிந்த பின்னர் தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றோம்“ என்றார்.

அரசு வக்கீல் ஆஜராகி, பாலமுருகன் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். இதுதவிர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும் விசாரணை நடத்தி வருகிறது. எனவே 3-வதாக மற்றொரு விசாரணை அமைப்பு இதில் தலையிட தேவையில்லை என்றார்.

ஆனால் வக்கீல் ஹென்றிடிபேன் ஆஜராகி, பாலமுருகன் இறப்பு குறித்து அவரது தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத காவலில் தாக்கியதால் தான் பாலமுருகன் இறந்துள்ளார். ஐகோர்ட்டின் இடைக்கால உத்தரவுகளை பின்பற்றி இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றார். விசாரணை முடிவில், வழக்கை வாபஸ் பெற்றது குறித்து பாலமுருகனின் தந்தை முத்துக்கருப்பன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story