சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர்


சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த கோடிக்கணக்கான ரூபாய் தங்கம் சிக்கியது-உடந்தையாக இருந்த சுங்க இலாகா  அதிகாரிகளும் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:15 AM IST (Updated: 20 Feb 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் சிக்கியது. கடத்தல்காரர்களுக்கு உதவிய சுங்க இலாகா அதிகாரிகளும் பிடிபட்டனர். அவர்களிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விமான நிலையத்தில் சோதனை
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாகவும், கடத்தல்காரர்களில் சிலருக்கு விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு 10 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசியா, இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த பயணிகள் சுங்க சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர்.

கோடிக்கணக்கான ரூபாய் தங்கம்
அவர்களை சந்தேகத்தின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். ஒரே நாளில் சுமார் 25 பயணிகளிடம் நடத்திய சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 25-க்கும் மேற்பட்ட பயணிகளையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் குருவிகள் என்பதும், பல்வேறு நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் என்றும் தெரியவந்தது.

5 அதிகாரிகள் சிக்கினர்
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சுங்கத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் உதவியுடன் கடத்தல் பொருட்கள் வெளியே கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதை அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 5 பேரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 2 அதிகாரிகள் வடமாநில கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போனது தெரியவந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது பிடிபட்ட குருவி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை எடைபோடும் பணிகளும் நடந்து வருகிறது.

கைது ஆவார்கள்?
சுமார் 12 மணி நேரமாக நடந்து வரும் விசாரணையில் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்த சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, “இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடப்பதால் தற்போது எதுவும் கூற முடியாது. விசாரணை முழுமையாக முடிந்த பின்னர் தகவல்கள் வெளியிடப்படும்” என்றனர்.

கடத்தல்காரர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் உதவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story