ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இந்து அமைப்புகள் ‘திடீர்’ முற்றுகை


ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
x
ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட போது எடுத்த படம்.
தினத்தந்தி 20 Feb 2020 7:22 AM GMT (Updated: 20 Feb 2020 7:22 AM GMT)

ஆம்பூர் அருகே திருவிழாவுக்கு வந்த பக்தர்களின் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்ததை இந்து முன்னணி அமைப்பாளர் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவில் திருவிழா
ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் கிராமத்தில் சுயம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மாசி கரக திருவிழா நேற்று நடந்தது. அங்கு ஆம்பூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருவதால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் திருவிழா நடக்கும் இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை தணிக்கை செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று கோவில் திருவிழாவிற்கு சென்ற இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் எம்.தீனதயாளன், பக்தர்களின் வாகனத்தை தணிக்கை செய்து வழக்குப்பதிவு செய்து வருவது குறித்து அங்கு பணியில் இருந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜிடம் கேட்டுள்ளார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை
அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒருவரையொருவர் சட்டையை பிடித்து கொண்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் எம்.தீனதயாளன், இந்து முன்னணி கோட்ட செயலாளர் மகே‌‌ஷ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சி.வாசுதேவன், முன்னாள் மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் தண்டாயுதபாணி, ஆம்பூர் நகர பா.ஜ.க. தலைவர் பிரேம்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் உறுதி அளித்தார்.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story