தொடர்ந்து உயர்வு: புதிய உச்சத்தில் தங்கம் விலை - பவுன் ரூ.31,720-க்கு விற்பனை
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் நேற்று ரூ.31 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.25 ஆயிரம் என்று இருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.30 ஆயிரத்தை கடந்தது.
அதன்பின்னரும், விலை அதிகரித்து கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத உயர்வுக்கு சென்றது. அவ்வப்போது விலை சற்று குறைந்தாலும், ராக்கெட் வேகத்தில் மீண்டும் விலை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.
அதிலும், இந்த மாத தொடக்கத்தில் இருந்தேவிலை உயர்வை சந்தித்து வந்த தங்கம், நேற்று புதிய உச்சத்தையும் தொட்டு இருக்கிறது.
ரூ.31,720-க்கு விற்பனை
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 926-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 408-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.39-ம், பவுனுக்கு ரூ.312-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 965-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று கிராமுக்கு ஒரு ரூபாய் 20 காசும், கிலோவுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் 51 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.51 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
காரணம் என்ன?
தங்கம் விலையில் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்தை கடந்துவிடும் என்று தங்கம் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
‘கொரோனா வைரஸ்’ தாக்குதல் காரணமாக, பல நாடுகளில் உணவு, துணி வகைகள் உள்பட இதர பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் உலக பொருளாதாரம் வலு இழப்பதால், தொடர்ந்து தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
அதேபோல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story