ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் - சட்டசபையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கோரிக்கை


நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்
x
நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்
தினத்தந்தி 20 Feb 2020 10:01 AM GMT (Updated: 2020-02-20T15:31:33+05:30)

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் என்று சட்டசபையில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டசபை கூட்டத்தில் நாகர்கோவில் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் பேசும்போது கூறியதாவது:-

சிகிச்சை பிரிவு
நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு வாரத்துக்கு முன்பாக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெற கூடிய நேரத்தில் மின்தடை ஏற்பட்டு, அறுவை சிகிச்சை நின்று விடக்கூடிய ஒரு நிலைமை உருவானது. இதனால் நோயாளிகள் உயிரிழக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே மிகப்பெரிய ராட்சத ஜெனரேட்டர் வசதி அல்லது தனியாக மின்வழித்தட பாதை அமைத்து நோயாளிகளுக்கு வசதி வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டு விட்டது. எனவே மீண்டும் புற்றுநோய்க்கு என்று தனிப்பிரிவை தொடங்க வேண்டும். இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனை சீர்செய்ய இந்த அரசு முன்வருமா? என்பதையும் அறிய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண்டல புற்றுநோய் மையம்
இதற்கு பதில் அளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புற்றுநோய் மையங்களை மண்டல அளவில் நாம் அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம். தூத்துக்குடியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லினியர் ஆக்சிலெரேட்டர் என்ற மிகப்பெரிய கருவியை அமைக்கும் பணி அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அது மண்டல புற்றுநோய் மையமாக உருவாக்கப்படுகின்ற போது குமரி மாவட்ட மக்களுக்கும் அது பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

Next Story