விருதுநகர் மருத்துவக் கல்லூரி அடிக்கல்நாட்டு விழாவுக்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தொடக்கம்


விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா
x
விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா
தினத்தந்தி 20 Feb 2020 11:13 AM GMT (Updated: 20 Feb 2020 11:13 AM GMT)

விருதுநகரில் வருகிற 1-ந்தேதி மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிக்கான முகூர்த்தக் கால் நடும் விழா கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.

அரசு விழா
விருதுநகரில், மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி தொடங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தி அனுமதி பெற்று தந்துள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.444 கோடி மதிப்பீட்டில் அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சி பகுதிகளுக்கான கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணி மற்றும் கிராம பகுதிகளுக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 1-ந்தேதி விருதுநகர் வருகை தருகின்றனர். அன்றைய தினம் புதிய அரசு துறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

ஏற்பாடு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆலோசனைப்படி, கலெக்டர் கண்ணன் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது மாவட்ட முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

பிரமாண்ட பந்தல்
இந்த விழா கலெக்டர் அலுவலக வளாகத்திற்குட்பட்ட பகுதியில், மருத்துவக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 22 ஏக்கர் நிலத்தில் நடைபெறுகிறது. விழாவிற்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுவதுடன் எங்கிருந்து பார்த்தாலும் விழா மேடையில் அமர்ந்திருக்கும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் தெரியக்கூடிய வகையில் பிரமாண்ட மேடையும் அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கலெக்டரின் மேற்பார்வையில், பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.

நேற்று விழா நடைபெறும் இடத்தில் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தொடங்குவதற்கான முகூர்த் தக்கால் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் சுதாகர், முத்து குமார், பொதுப்பணித்துறை நிர்வாக என்ஜினீயர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரமுகர்கள்
இவ்விழாவில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் பாலுராஜ், விருதுநகர் அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மூக்கையா, மாவட்ட கவுன்சிலர் நாகராஜன், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், துணைத்தலைவர் முத்துலட்சுமி தர்மலிங்கம், கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story