வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்


மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
x
மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
தினத்தந்தி 20 Feb 2020 5:26 PM IST (Updated: 20 Feb 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

தூதரகத்தை அணுக வேண்டும்
மாவட்ட வருவாய்த்துறையின் மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயண முன்னேற்றத்திற்கான முதன்மைப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அரசு விதிகளை கடைபிடித்து செயல்பட போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வருவாய்த்துறையின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்தப் பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்பவர்கள் தங்கள் பணிக்கேற்ப அனுமதியை முறையாக பெற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். பணிக்காலம் முடிந்ததும் உரியமுறையில் புதுப்பித்து பணியாற்ற வேண்டும். அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக தான் செல்ல வேண்டும்.

அனைத்து ஆவணங்களின் நகல்களையும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தன்வசம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும். பொதுவாக வேலைக்கு செல்லும் போது அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் கலாசாரங்களை மதித்து நடந்திட வேண்டும். வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் போது யாதொரு குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படுவது கண்டறிந்தால் வேலை செய்யும் நாட்டிலோ அல்லது சொந்த நாட்டிலோ குற்ற வழக்கு தொடரப்படும். பணிபுரியும் போது ஏதேனும் உதவி வேண்டும் என்றால் உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகி உதவி பெற்றிட வேண்டும்.

இடர்பாடுகள்
மேலும் தங்கள் பணிபுரியும் இடம், நிறுவனம் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வீட்டு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். அதேபோல் சென்றடைய வேண்டிய நாட்டை அடைந்தவுடன் அங்குள்ள இந்திய தூதரகத்தை அல்லது துணை தூதரகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் கடவுச்சீட்டு குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பணியாற்றும் போது ஏதேனும் இடர்பாடுகள் வந்தால் உடனடியாக தூதரகத்தை அணுகவேண்டும். புலம் பெயர் மக்கள் மற்றும் வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்கு 11 மொழிகளில் தேவையான தகவல்களை 24 மணி நேர உதவி சேவையினை வெளிநாடு வாழ் இந்தியருக்கான உதவி மையம் வழங்குகிறது. இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கூறினார். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், பேராசிரியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story