கழுகுமலையில் பயங்கரம்: பெட்டிக்கடைக்காரர் வெட்டிக்கொலை தொழிலாளி கைது
கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கழுகுமலை,
கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டிக்கடைக்காரர்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கே.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அழகய்யா. இவருடைய மகன் அழகுராஜ் (வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கும், பக்கத்து ஊரான கரட்டுமலையைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் மகேந்திரனுக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்தது. மகேந்திரன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை 11.30 மணியளவில அழகுராஜ் தனது மொபட்டில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பஜாருக்கு சென்று, பெட்டிக்கடைக்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் அவர், கழுகுமலை பஜாரில் காந்தி மைதானம் எதிரில் உள்ள மளிகை கடையின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு வந்த மகேந்திரன், அழகுராஜிடம் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று மகேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகுராஜை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்து, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அழகுராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று, அழகுராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, அழகுராஜை வெட்டிக் கொலை செய்த மகேந்திரன், கழுகுமலை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைமறியல்
அழகுராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவருடைய உறவினர்கள், பொதுமக்கள் கழுகுமலை–சங்கரன்கோவில் ரோடு மேல கேட் பகுதியிலும், கழுகுமலை–கயத்தாறு ரோடு பகுதியிலும் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அந்த வழியாக அரசு நிகழ்ச்சிக்காக காரில் சென்ற தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளனிடமும், சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் முறையிட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட அழகுராஜிக்கு பிச்சைக்கனி என்ற மனைவியும், அஜய் (11), அகிலேஷ் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story