சிறியவகை செயற்கைகோளை உருவாக்கிய பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


சிறியவகை செயற்கைகோளை உருவாக்கிய பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-20T21:03:19+05:30)

சிறியவகை செயற்கை கோளை உருவாக்கிய பள்ளி மாணவிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் அழைத்து பாராட்டினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் சுபாஹானா, கிருத்திகா ஆகியோர் எஸ்.எப்.டிசாட் என்ற பெயரில் சிறிய ரக செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர். இதை அறிந்த கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்.

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாகும் வகையில் அதிகளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும். இந்த கண்டு பிடிப்பை உருவாக்கிய மாணவிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து மாணவிகள் நிருபர்களிடம் கூறுகையில், இந்த செயற்கைகோள் மூலம் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும். மேலும் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவற்றை அளவிட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பயன்களை பெற்று கொள்ளலாம். முதல் கட்டமாக அறந்தாங்கி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களை ட்ரோன் மூலம் ஆராய்ந்து சோதனை செய்து பார்த்து உள்ளோம்.

வெற்றிகரமாக இந்த செயற்கைகோள் நிலை நிறுத்த பட்டதும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாய நிலங்களையும் இதே போன்று ஆராய்ந்து பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே கணித்து எந்த நிலத்தில் என்ன மாதிரியான பயிர் செய்தால் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மெக்சிக்கோவில் உள்ள ஏர் பேஸ் தளத்தில் இருந்து ஹீலியம் கேப்சூல் மூலம் இந்த செயற்கை கோள் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என்றனர்.

Next Story