சுரண்டையில் துணிகரம் காவல்துறை இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை தந்தை– மகன் உள்பட 7 பேர் கைது


சுரண்டையில் துணிகரம் காவல்துறை இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை தந்தை– மகன் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-20T21:22:41+05:30)

சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை, 

சுரண்டையில் காவல் துறைக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவலர் குடியிருப்பு 

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவலர் குடியிருப்பு கட்டுவற்கு சுரண்டை நகரப்பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2000–ம் ஆண்டு சுரண்டை– சங்கரன்கோவில் சாலையின் மையப்பகுதியில் காவலர் குடியிருப்பு கட்டுவதற்கு 2.15 ஏக்கர் நிலத்தை, மாவட்ட கலெக்டர் ஒதுக்கினார். பின்னர் அந்த இடத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு, இதுவரை காலியிடமாக உள்ளது.

இந்தநிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசைன், காவலர் குடியிருப்புக்குரிய இடத்தை சுரண்டையில் ஆய்வு செய்தார். பின்னர் அதற்கான வில்லங்க சான்று எடுத்து பார்த்தபோது, அந்த இடத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

போலி பத்திரம் 

விசாரணையில், கடந்த 2018–ம் ஆண்டு ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சுரண்டையில் உள்ள காவலர் குடியிருப்பு இடத்தை இடையர்தவணையை சேர்ந்த ஆயர்நம்பி என்பவர் பெயரில் போலியாக பவர் பத்திரம் போட்டு கொடுத்துள்ளார். அதனை வாசுதேவநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த இடத்தில் 50 சென்ட் இடத்தை ஆயர் நம்பி தனது மகன் சிவசக்திக்கு கிரய பத்திரம் முடித்துள்ளார்.

மீதமுள்ள இடத்தை ஆயர்நம்பி விற்பனை செய்ய முயன்றபோது கடையநல்லூர் போகநல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டியன், ராஜகோபால், இடைகாலை சேர்ந்த பத்திர எழுத்தர் பூபதி பெருமாள், முருகேச குமார், ஆவண எழுத்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

7 பேர் கைது 

பின்னர் இதுதொடர்பாக 9 பேர் மீது சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குப்பதிவு செய்தார். இதில் ஆயர்நம்பி, அவருடைய மகன் சிவசக்தி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

காவல் துறைக்கு சொந்தமான இடத்தை துணிகரமாக போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story