தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்; விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:00 PM GMT (Updated: 2020-02-20T21:29:13+05:30)

ஏரி-குளங்களை தூர்வார வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூரில், மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கலிபுல்லா, அமைப்பாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் தமிழகத்தில் ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள், முள் செடிகளை அகற்றி, ஏரிகளையும், பாசன வாய்க்கால்களையும் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரி, குளங்கள் தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தை சங்க விவசாயிகளால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். 

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டம், கல்லாற்றில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கத்தை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். விசுவக்குடி நீர்த்தேக்கத்தை சீரமைக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனியாக தோட்டக்கலை துணை இயக்குனர் நியமிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி மையமும், மார்க்கெட்டிங் கமிட்டியும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசு நிறைவேற்றி வெங்காயம் சம்பந்தமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வங்கிகளில் விவசாயிகள் நகைகள் ஏலம் விடுவதாகவும், பயிர்கடன் கட்டக்கோரியும் நெருக்கடிகள் கொடுப்பதை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், சின்னவெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் நலனில் அதிகம் அக்கறை காட்டாத மாவட்ட கலெக்டரை கண்டித்தும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நாவலூர் கிளைத் தலைவர் முத்துசாமி நன்றி கூறினார்.

Next Story