சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிப்பு: இழப்பீடு கேட்டு என்.எல்.சி. முன்பு விவசாயிகள் மறியல் - நெய்வேலியில் பரபரப்பு
நெய்வேலியில் சுரங்க மண்ணால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கேட்டு என்.எல்.சி. முன்பு விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு திறந்தவெளி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுத்து, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண், சுரங்க எல்லைப்பகுதியில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள மண், மழை காலங்களில் கரைந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்துவிடும். இதனால் சுரங்கத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயமே செய்ய முடியாத அளவிற்கு பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சுரங்க மண்ணால் பாதிக்கப்பட்ட அரசக்குழி, கொம்பாடிகுப்பம், ஊத்தாங்கால், கொளப்பாக்கம், பொன்னலகரம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஒன்று திரண்டு, என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் விருத்தாசலம் தாசில்தார் கவியரசன் மற்றும் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தின் பொதுமேலாளர் மசும்தர் ஆகியோர் விரைந்து வந்த னர். அப்போது விவசாய நிலத்தில் புகுந்த என்.எல்.சி. மண்ணை அகற்றி விட்டு அங்கு விவசாயம் செய்ய பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மழைக்காலத்தில் சுரங்க மண் கரைந்து, விளை நிலத்துக்குள் புகுவதும், பின்னர் அதனை அகற்றி அந்த இடத்தில் விவசாயம் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இதில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை என்.எல்.சி. நிர்வாகம் வழங்குவதில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றனர்.
இதை கேட்ட தாசில்தார் கவியரசன், இது தொடர்பாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என தெரிவித்தார். அதனை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.
Related Tags :
Next Story