தேசிய மாணவர் படையினருக்கு பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி


தேசிய மாணவர் படையினருக்கு   பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 21 Feb 2020 3:45 AM IST (Updated: 20 Feb 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது.

சென்னை, 

கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் தேசிய மாணவர் படை, மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலர்களுக்கான பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.1 கோடியே 23 லட்சம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதனுடைய தொடக்க விழா சென்னை, மாநில கல்லூரியில் நடந்தது.

தமிழக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி, பேரிடர் மேலாண்மை திறன் மேம்பாட்டு பயிற்சி விளக்க கையேட்டை வெளியிட்டார். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேரிடர் மேலாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பேரிடர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார்.

பேரிடர் விழிப்புணர்வு

விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன், உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர், சி.சைலேந்திர பாபு, மாநில கல்லூரி முதல்வர் இ.பத்மினி உள்பட பலர் பேசினார்கள்.

விழாவில் 80 தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கும், தேசிய மாணவர் படையினை சேர்ந்த 1500 மாணவ-மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி பெற்ற தேசிய மாணவர் படையினை சேர்ந்த மாணவ-மாணவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று, 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி திட்டத்தில் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தெருமுனை நாடகங்கள், பொம்மலாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன.

பேரிடர் தொடர்பான குறும்படங்கள் வெளியிடப்படுவதோடு, பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட உள்ளது.

Next Story