‘மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விட்டது’ கனிமொழி எம்.பி. வேதனை
மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, லயோலா கல்லூரி சமூகப்பணித்துறை சார்பில், ‘சகிப்புத்தன்மையில் இருந்தும் மரியாதையில் இருந்தும் அமைதி ஆரம்பிக்கிறது’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதில் தி.மு.க. மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழ்நாடு என்ற பெருமை
உழைப்பு, ரத்தம், வியர்வை, சிந்தி நாம் உருவாக்கியிருக்கும் இந்த சமூகம், இன்னும் நாம் நினைக்கும் இடத்தை சென்றடையவில்லை. அதைநோக்கிய ஒரு பயணத்தை நாம் தொடங்கி இருக்கிறோம். அந்த பயணத்தை தொடங்கியிருக்கிற மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு என்ற பெருமையோடு நாம் நடந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் சமூக சமத்துவத்தை நோக்கிய இந்த பயணத்தை திசைமாற்றக்கூடிய விதத்தில் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகள் துரதிர்ஷ்டவசமாக பலன் அளித்து கொண்டிருக்கின்றன.
தனியார்மயம்
மதிய உணவுத்திட்டம் எல்லா மாணவர்களும் பள்ளிக்கு படிக்க வரவேண்டும், உணவு இல்லை என்ற காரணத்துக்காக பள்ளிக்கு வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்டது. நான் மிகவும் பெருமையாக சொல்வேன். தமிழகத்தில் கருத்து வேறுபாடு கொண்ட அரசுகள் பதவியேற்று கொண்டபோதும் கூட இதை நிறுத்தவில்லை.
ஜஸ்டிஸ் இயக்கம் கொண்டுவந்த திட்டம், அடுத்து காங்கிரஸ், பின்னர் தி.மு.க., அ.தி.மு.க. என அனைத்து அரசுகளும் இத்திட்டத்தை விரிவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும்தான் அக்கறை காட்டியதே தவிர அதை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால் இன்று அதுகூட தனியார் மயமாக்கப்படுகிறது.
வன்முறை அதிகரிப்பு
வன்முறை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வண்ணாரப்பேட்டை பகுதியில் நடக்கிற பிரச்சினைகளாக இருக்கட்டும். வேறு எங்கு நடப்பதாக இருக்கட்டும். அதை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் தடுத்தாலும் அது நம் மீது திணிக்கப்படுகிறது.
மக்களும், பெண்களும் வீதியில் போராட வந்திருக்கிறார்கள். அரசு அவர்கள் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அதனால் அவர்கள் போராட்டத்துக்கு தள்ளப்பட்டதால் உலகமே இன்று அவர்களை கவனித்து கொண்டிருக்கிறது. நீதி இல்லையேல் அமைதி இருக்காது. நீதி கிடைக்கும் வரை மக்கள் ஓயமாட்டார்கள். சிறுபான்மையினர்தான் கல்விக்காக, சுதந்திரத்துக்காக அதிகமாக பங்களித்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story