சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி - 24 பயணிகள் படுகாயம்
சாலையில் சரிந்து விழுந்த லாரியின் கன்டெய்னர் மீது பஸ் மோதியதில் 19 பேர் பலியானார்கள். மேலும் 24 பயணிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கேரள மாநில அரசுக்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பஸ் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை எர்ணாகுளத்தை அடுத்த பெரும்பாவூரை சேர்ந்த கிரீஸ் (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த பஸ்சில் 12 பெண்கள் உள்பட 48 பேர் பயணம் செய்தனர். பஸ்சில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த பஸ் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு எதிர்திசையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி அவினாசி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மைய தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் லாரியின் கன்டெய்னர் சரிந்து சாலையின் மறுபக்கத்தில் விழுந்தது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பஸ் அந்த கன்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் பஸ்சின் வலதுபுற பகுதி முழுவதுமாக சுக்குநூறாக நொறுங்கி சின்னாபின்னமானது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் இடிபாடுகளில் சிக்கி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர். பலர் இருக்கையில் அமர்ந்திருந்தபடியே உயிருக்குப் போராடி கொண்டிருந்தனர். இதற்கிடையே டிரைவர் உள்பட 3 பேர் தூக்கி வீசப்பட்டு, சாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவினாசி ரோந்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பஸ் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினரும், அவசரகால மீட்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பஸ்சில் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் உள்பக்கம் முழுவதும் ஒன்றோடொன்று நசுங்கி இருந்ததால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிரேன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.
இந்த விபத்தில் 19 பேர் பலியானவர்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
1.கேரள அரசு பஸ் டிரைவர் கிரீஸ் (43), கேரள மாநிலம், பெரும்பாவூர்.
2. கேரள அரசு பஸ்சின் மாற்று டிரைவர் பினு பாபு (18), அரக்குண்ணம்.
3. இக்னி ரப்பேல் (39), திருச்சூர்.
4.ஹனீஸ் (25), வாலப்பில், திருச்சூர்.
5.சிவக்குமார் (35), ஒத்தப்பாலம், பாலக்காடு.
6.ராகேஷ் (35), திருகாப்புரா, பாலக்காடு.
7.ஜிஸ்மன் சாஜூ (24), திருவோரூர்.
8.நசீப் முகமது அலி (24), திருச்சூர்.
9.ஐஸ்வர்யா (24), எர்ணாகுளம்.
10.ரோசனா, பாலக்காடு.
11.சிவசங்கர் (30), எர்ணாகுளம்.
12.அனு (25), திருச்சூர்.
13.ஜோபி பால் (30), திருச்சூர்.
14.யேசுதாஸ் (30),
15.கோபிகா (25), எர்ணாகுளம்.
16. எம்.சி.மேத்யூ (30), எர்ணாகுளம்.
17.தங்கச்சன் (40), எர்ணாகுளம்.
18.மனாசி மணிகண்டன் (25) பெங்களூரு.
19.கிரண்குமார் (33), கர்நாடக மாநிலம் நிலக்கல்.
பலியானவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மேலும் இந்த விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் எந்த காயமும் இல்லாமல் தப்பினார்கள்.
இதற்கிடையே இந்த விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவர் பாலக்காடு ஒத்தபாலத்தை சேர்ந்த ஹேமராஜ் (38) போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story