கர்நாடகத்தில் முஸ்லிம் வாலிபர் மடாதிபதியானார்


கர்நாடகத்தில்   முஸ்லிம் வாலிபர் மடாதிபதியானார்
x
தினத்தந்தி 20 Feb 2020 10:45 PM GMT (Updated: 20 Feb 2020 9:46 PM GMT)

கா்நாடகத்தில் முஸ்லிம் வாலிபா் ஒருவர் மடாதிபதியானார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை இந்து மதத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் லிங்காயத் மடங்கள் தான் பிரதானமாக இருக்கின்றன. மாநிலத்தில் அரசியல் மாற்றங்களையே உருவாக்கும் அளவிற்கு இன்றளவும் 5 மடங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்.

எடியூரப்பா முன்பு பா.ஜனதாவில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்கியபோது, லிங்காயத் மக்கள் தான் அவரை வெற்றி பெற செய்தனர். அந்த அளவுக்கு கர்நாடக அரசியலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சமூகமாக லிங்காயத் உள்ளது.

முஸ்லிம் வாலிபர் தேர்வு

இந்த நிலையில் கதக் மாவட்டம் ரோனா தாலுகா அசொடி கிராமத்தில் ஹஜூரி என்ற லிங்காயத் சமூகத்துக்கு ெசாந்தமான மடத்துக்கு முஸ்லிம் வாலிபர் ஒருவர் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மடாதிபதி ஸ்ரீமுருக ராஜேந்திரா கொரனேஷ்வரர், மடாதிபதியாக நியமித்தார். இந்த மடமானது, ஸ்ரீஜகத்குரு முருக ராஜேந்திர மடத்தின் கீழ் இயங்கும் 361 மடங்களில் ஒன்றாகும். சிறுவயதில் இருந்ேத பசவ தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட திவான் ஷெரீப் ரஹீம்சாப் முல்லா (வயது 33) என்பவரே, ஹஜூரி மடத்தின் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு லிங்காயத் மடம் கட்டியபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த குடில்களில் தங்கி மடத்திற்கான வேலைகளை பார்த்து வந்தார். தற்போது ஹஜூரி மடத்தின் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திவான் ஷெரீப் ரஹீம்சாப் முல்லாவை அங்கு வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர் பூரண மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முருக ராஜேந்திர சிவயோகி

இவருடைய தந்தை ரஹீம்சாப் முல்லாவும் பசவண்ணரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் அவர், லிங்காயத் மடம் அமைப்பதற்காக தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். தற்போது அவருடைய குடும்பத்தினர் அனைவரும் சிவப்பெருமானை வணங்கி வருகிறார்கள். புதிய மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திவான் ஷெரீப் ரஹீம்சாப் முல்லா, தன்னுடைய பெயர் முருக ராஜேந்திர சிவயோகி என மாற்றி உள்ளார்.

இதுகுறித்து புதிய மடாதிபதி முருக ராஜேந்திர சிவயோகி கூறுகையில், எந்த மதத்தை சேர்ந்தவரும் இந்த மடத்திற்கு வரலாம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றே. முஸ்லிம் சமூகத்தை சோ்ந்த நான், லிங்காயத் மடத்தின் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பசவண்ணரின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட நான், இந்த நிலைக்கு வந்துள்ளேன். மதத்தின் அடிப்படையில் மக்கள் யாரும் பிரியக் கூடாது. அனைவரும் மனிதர்களே என்றார்.

மத நல்லிணக்கம்

சாதிகளுக்கும், மதங்களுக்கும் இடையே பெரிய பிரிவினை ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் ஹஜூரி மடத்தின் மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் வாலிபரை மக்கள் ஏற்று கொண்டிருப்பது மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story