வட கர்நாடக விவசாயிகளின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து


வட கர்நாடக விவசாயிகளின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது   நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து
x
தினத்தந்தி 20 Feb 2020 11:00 PM GMT (Updated: 20 Feb 2020 9:50 PM GMT)

மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட நிலையில் வட கர்நாடக விவசாயிகளின் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

மகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை வரவேற்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வட கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்சினை தீரும். நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசை நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

கனவு நனவாகும்

மகதாயி நதியில் இருந்து 3.9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கலசா, பண்டூரி கால்வாய் மூலம் மல்லபிரபா ஆற்றில் திருப்பி விடப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற்று திட்ட பணிகளை தொடங்குவோம். குடிநீர் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர 1.50 டி.எம்.சி. தண்ணீரை எடுத்து மகதாயி நதியில் இருந்து அதனை சுற்றியுள்ள ஏரி, குளங்களில் நிரப்புவோம்.

இது போக, 8.20 டி.எம்.சி. நீர், மின் உற்பத்தி செய்ய கர்நாடக மின்சார கழகத்திற்கு வழங்கப்படும். இதில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஆற்றில் விடப்படும். வட கர்நாடக விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நனவாகும் நேரம் வந்துள்ளது. கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் 13.42 டி.எம்.சி. நீர் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளப்படும்.

இறுதி விசாரணை

இந்த உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வழக்கில் இறுதி விசாரணை வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. நாங்கள் அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்வோம்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.

Next Story