யானைகளை விரட்ட வலியுறுத்தி விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயற்சி - வனத்துறையினர் சமாதானப்படுத்தினர்
யானைகளை விரட்ட வலியுறுத்தி விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.
கன்னிவாடி,
ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பண்ணைப்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் பண்ணைப்பட்டியில் கடந்த மாதம் யானை தாக்கியதில் 2 விவசாயிகள் பலியாகினர். இந்த நிலையில் பண்ணைப்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகளை வேறு இடத்துக்கு விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் விவசாயிகளுடன் இணைந்து பிப்ரவரி 20-ந்தேதி (அதாவது நேற்று) சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் விவசாயிகள் ஏராளமானோர் கன்னிவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, திண்டுக்கல் மேற்கு தாசில்தார் பாண்டிச்செல்வி, வருவாய் ஆய்வாளர் பிரியா, வனச்சரகர் மனோஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்தனர்.
பின்னர் கன்னிவாடி பேரூராட்சிக்கு சொந்தமான மண்டபத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த 12 யானைகளில் 10 யானைகள் கொடைக்கானல் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 யானைகளையும் கும்கி யானைகளை பயன்படுத்தி விரட்ட முடிவு செய்துள்ளோம்.
யானைகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க சேதமடைந்த நிலையில் உள்ள அகழிகள் சீரமைக்கப்படும். மேலும் வனப்பகுதியை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்படும். அத்துடன் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்க அந்த இடங்களை சுற்றிலும் மருந்து தெளிக்கப்படும்.
இந்த மருந்தின் வாசனை இருக்கும் வரையில் காட்டுப்பன்றிகள் அந்த இடத்துக்கு வராது. 20 நாட்களுக்கு ஒருமுறை இந்த மருந்து விளைநிலங்களை சுற்றிலும் தெளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story