சாலை அமைக்கும் பணியின் போது ரோடு ரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதம் - பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டியில் சாலை அமைக்கும் பணியின் போது ரோடு ரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டியில் சென்னை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ரெயில் நிலையம் செல்லும் சாலை அருகே ரோடு ரோலர் எந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது ரோடு ரோலர் எந்திரம் எதிர்பாராதவிதமாக, அம்பேத்கர் சிலையின் ஒரு பக்கம் மோதியது. இதில், சிலையின் கைவிரல் ஒன்றும், சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டு,சிலை பீடம் ஆகியன சேதமடைந்தது. இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் பரவியதால், அங்கு பொதுமக்கள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன்,போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு இந்திய குடியரசு கட்சி அர்ச்சுனன் முன்னிலையில் பொது மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் தரப்பில், சிலைக்கு புதிய இரும்பு கூண்டு அமைத்தும் சிலையின் விரல் பகுதி, பீடப்பகுதியை சீரமைத்து தரவும் ஒப்புக்கொண்டனர். இதையேற்று அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் அங்கு போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story