நெல் அறுவடை எந்திரங்கள் கூடுதலாக வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நெல்லை,
தனியார் அதிக பணம் வசூலிப்பதால் நெல் அறுவடை எந்திரங்களை கூடுதலாக வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மணிஷ்நாரணவரே ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா பேசுகையில், நெல்லை மாவட்ட அணைகளில் 60 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. 39 ஆயிரத்து 751 ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயிறுவகைகள், எண்ணெய்வித்துகளும் பயிரிடப்பட்டு உள்ளன. உரங்கள், விதைப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதில் 24 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 1224 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டமான விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு 61 வயதில் இருந்து ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார்.
நெல் அறுவடை எந்திரம்
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெல்லை மாவட்டத்தில் தற்போது அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. அதன் அறுவடையும் நடந்து வருகிறது. ஆனால் போதிய அளவு நெல் அறுவடை எந்திரங்கள் இல்லை. தனியார் அறுவடை எந்திரங்களில் மணிக்கு ரூ.3 ஆயிரம் வசூலிக்கிறார்கள். அரசு அறுவடை எந்திரத்தில் மணிக்கு ரூ.860 தான் வசூலிக்கிறார்கள். எனவே அரசு அதிக அளவில் நெல் அறுவடை எந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கலெக்டர்:– விவசாயக்குழுவினர் அறுவடை எந்திரங்களை வாங்கி நீங்களே வாடகைக்கு விடலாம். இதற்கு மானியமும், கடன் உதவியும் வழங்கப்படும். தற்போது கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து நெல் அறுவடை எந்திரங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிமுத்தாறு பெருங்கால் பாசன விவசாயிகள், முன்குறுவை சாகுபடிக்காக ஏப்ரல் மாதம் 1–ந் தேதி தண்ணீர் திறந்து விடவேண்டும். கடந்த ஆண்டு குடிநீருக்கு என்று கூறி தண்ணீரை வீணாக தாமிரபரணி ஆற்றில் திறந்துவிட்டனர் என்றனர்.
பயிர்காப்பீடு
வன்னிக்கோனேந்தல் வெள்ளத்துரை:– நான் நெல் பயிருக்கு பயிர்காப்பீட்டுக்கு ரூ.704 பிரீமியம் செலுத்தினேன். ஆனால் எனது நெற்பயிர்கள் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் பயிர்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை நான் செலுத்திய பிரீமியம் தொகையை விட குறைவாக ரூ.497 வழங்கி உள்ளார்கள்.
பெரும்படையார்:– களக்காடு பதியில் 2016–2017–ம் ஆண்டு நெல் பயிருக்கு 263 பேர் பயிர்காப்பீடு செய்து உள்ளனர். அந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விட்டனர். ஆனால் அனைத்து விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வாங்கப்படவில்லை.
கலெக்டர்:– மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மணிமுத்தாறு அணையின் தண்ணீரை குடிநீருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி, தனது தோட்டத்தில் காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம் அடைந்தது. அதற்கு முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லை. 95 மரத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. குறைந்த அளவு தொகை தந்துவிட்டு அதிக அளவில் பணம் தந்ததாக எழுதி உள்ளனர். குரங்குகளின் தொந்தரவும் அதிகமாக உள்ளது என்றார்.
கலெக்டர்:– உங்கள் தோட்டம் வனப்பகுதியில் இருப்பதால் வன விலங்குகளால் சேதம் அடையாத பயிர்களை பயிரிட்டால் உங்களுக்கு நல்லது தானே. மேலும் தற்போது ஒரு ஆயிலை பயன்படுத்தி வன விலங்குகளை விரட்டவேண்டும்.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் முதல்–அமைச்சரிடம் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பாரம்பரியமிக்க நெல் பாதுகாவலர் விருது பெற்ற பணகுடி கிருஷ்ணம்மாளை கலெக்டர் ஷில்பா பாராட்டினார்.
Related Tags :
Next Story