வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 1:28 PM GMT)

ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 208 ஊராட்சிகளின் 1,779 சிற்றூராட்சி வார்டுகள், 125 ஒன்றிய வார்டுகள், 13 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சி வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு கடந்த 18–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ம.ப. சிவன்அருள் வெளியிட்டார்.

மேலும் வார்டு மறுவரையறை குறித்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான மனுக்கள் இன்று வரை பெறப்படும் எனவும், ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் மீது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 25–ந் தேதி காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஒன்றிய ஊராட்சி அலுவலகம் சார்பில் அனைத்து ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஜோலார்பேட்டையை அடுத்த சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 9–வது வார்டு வெங்கட்ட கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.யசோதா சண்முகம் தலைமையில் நேற்று ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமாரிடம் சந்திரபுரம் ஊராட்சி 9–வது ஒன்றிய கவுன்சிலர் வார்டில் உள்ளவர்களை கல்நார்சம்பட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 20–வது வார்டில் சேர்த்துள்ளனர். இதனை பிரிக்காமல் சந்திரபுரம் ஒன்றிய கவுன்சிலர் வார்டிலேயே சேர்க்க வேண்டும் என மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இது சம்பந்தமாக அதிகாரிகளிடத்தில் தெரிவிப்பதாக பொது மக்களிடம் கூறினார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 9–வது வார்டில் 650 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 20–வது வார்டு உருவாக்கி வெங்கட்ட கவுண்டனூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்நார்சம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வார்டில் சேர்த்துள்ளனர். எனவே எங்களை சந்திரபுரம் ஒன்றியக் கவுன்சிலர் வார்டிலேயே சேர்க்க வேண்டும், இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் மீண்டும் முற்றுகை போராட்டம், மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Next Story