கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் கொலை: “கள்ளக்காதலை கண்டித்ததால் தீர்த்துக்கட்டினேன்” கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்


கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் கொலை: “கள்ளக்காதலை கண்டித்ததால் தீர்த்துக்கட்டினேன்” கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 1:42 PM GMT)

கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் கொலையில் கைதான கொத்தனார், கள்ளக்காதலை கண்டித்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

கழுகுமலை, 

கழுகுமலையில் பெட்டிக்கடைக்காரர் கொலையில் கைதான கொத்தனார், கள்ளக்காதலை கண்டித்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பெட்டிக்கடைக்காரர் கொலை 

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கே.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் அழகய்யா. இவருடைய மகன் அழகுராஜ் (வயது 35). பெட்டிக்கடைக்காரரான இவருக்கும், பக்கத்து ஊரான கரட்டுமலையைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் மகேந்திரனுக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் அழகுராஜ் தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பஜாருக்கு மொபட்டில் சென்றார். அப்போது அங்கு வந்த மகேந்திரன் அரிவாளால் அழகுராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அழகுராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் கழுகுமலை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது:–

கள்ளக்காதல் 

நான் கொத்தனராக வேலை செய்து வருகிறேன். எனக்கு வேலை இல்லாத நாட்களில் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைக்கும் வேலைக்கு செல்வேன். கே.ஆலங்குளத்தில் கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் பெண்ணும், அந்த தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு வருவது வழக்கம்.

அப்போது எங்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, உல்லாசமாக இருந்து வந்தேன். இதற்கிடையே அழகுராஜிம், அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். நான் அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வதை விரும்பாத அழகுராஜ் அடிக்கடி என்னை கண்டித்து வந்தார்.

கொலைமிரட்டல் 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை பார்க்க சென்ற என்னை அழகுராஜ் உள்ளிட்டவர்கள் தாக்கி, குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் என்னிடமும், அழகுராஜிடமும் விசாரித்து, எங்களை எச்சரித்து அனுப்பினர். பின்னர் அழகுராஜ் அடிக்கடி எனக்கு கொலைமிரட்டல் விடுத்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி கழுகுமலை பஜாருக்கு மொபட்டில் வந்த அழகுராஜை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு மகேந்திரன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து மகேந்திரனை போலீசார் நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story