குரூப்–4 தேர்வு முறைகேடு: போலீசார் தேடிய சலூன் கடைக்காரர் சாத்தான்குளம் கோர்ட்டில் சரண்


குரூப்–4 தேர்வு முறைகேடு: போலீசார் தேடிய சலூன் கடைக்காரர் சாத்தான்குளம் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 3:53 PM GMT)

குரூப்–4 தேர்வு முறைகேடு தொடர்பாக போலீசார் தேடிய சலூன் கடைக்காரர், சாத்தான்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சாத்தான்குளம், 

குரூப்–4 தேர்வு முறைகேடு தொடர்பாக போலீசார் தேடிய சலூன் கடைக்காரர், சாத்தான்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

குரூப்–4 தேர்வு முறைகேடு 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்–4, குரூப்–2 ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக பலரை கைது செய்த போலீசார், தலைமறைவான மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். குரூப்–4 தேர்வை முறைகேடாக எழுதியது தொடர்பாக, நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதியைச் சேர்ந்த சுயம்பு மகன் அய்யப்பனை (வயது 36) போலீசார் தேடி வந்தனர். அவர் பிளஸ்–2 படித்து விட்டு, அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரும் குரூப்–4 தேர்வை ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதி, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

சாத்தான்குளம் கோர்ட்டில் சரண் 

இதற்கிடையே, விஜயாபதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அரசு தேர்வுகளை முறைகேடாக எழுதி, தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். போலீசாரின் விசாரணையில், அய்யப்பனும் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அய்யப்பன் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து அய்யப்பனை போலீசார் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Next Story