நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை
கலவை தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கலவை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை தாலுகா புதிதாக உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலவை தாலுகாவின் முதல் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. துணை தாசில்தார் பாஸ்கர் தலைமை தாங்கினார். கலவை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
கலவை பகுதிகளில் உள்ள ஏரிகளை தூர்வார வேண்டும். வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள், விதை, விவசாய கருவிகள் குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு சரியான முறையில் தெரிவிக்க வேண்டும்.
கலவை தாலுகா பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
கலவை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் கண்டிப்பாக டாக்டர்கள் பணியாற்ற வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் சுப்பிரமணி, இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் பெருமாள், ஸ்ரீதர், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story