வியாபாரிகள் குறைந்த தொகைக்கு கொள்முதல் செய்வதால் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்பு


வியாபாரிகள் குறைந்த தொகைக்கு கொள்முதல் செய்வதால் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2020 9:30 PM GMT (Updated: 21 Feb 2020 5:47 PM GMT)

வியாபாரிகள் குறைந்த தொகைக்கு கொள்முதல் செய்வதால் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். முந்தைய கூட்டத்தில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பேசியதாவது:-

காளிமுத்து(தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்):-

உடுமலை, தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி, அவினாசி பகுதிகளில் 60 சதவீதம் பட்டு உற்பத்தி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை கோவை, ராம்நகர், தர்மபுரி ஆகிய இடங்களில் பட்டுவளர்ச்சி அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பட்டுக்கூடு விற்பனை தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது வழக்கம். ஆனால் விற்பனை செய்த தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2 மாதம் கழித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் வியாபாரிகளிடம் வாங்கி அதன்பிறகு வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்துகிறார்கள். இதனால் விவசாயிகள் பல சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

விவசாயிகளின் பணத்தேவையை பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று பட்டுக்கூட்டை 1 கிலோ ரூ.600-க்கு வாங்க வேண்டியதை ரூ.380-க்கு வாங்கி உடனடியாக பணம் கொடுக்கிறார்கள். இதனால் விவசாயிகள் வேறு வழியின்றி குறைந்த தொகைக்கு பட்டுக்கூடு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே விவசாயிகளுக்கு ஏற்படும் கடும் பாதிப்பை சரி செய்யும் வகையில் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் பட்டுக்கூட்டுக்கான தொகையை காலதாமதம் இல்லாமல் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற மாவட்டங்களை விட திருப்பூர் மாவட்டத்தில் தான் பட்டு உற்பத்தி அதிகம் நடக்கிறது. ஆனால் மற்ற மாவட்டங்களை போலவே மானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே பட்டு வளர்ச்சித்துறையிடம் இருந்து திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு அதிகப்படியான மானியத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

தாராபுரம், காங்கேயம், உடுமலை பகுதிகளில் உள்ள விவசாயிகள் சின்னவெங்காயத்தை அதிகம் உற்பத்தி செய்கிறார்கள். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் சின்னவெங்காயம் கிலோ ரூ.10 முதல் ரூ.18 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

இதன்காரணமாக விவசாயிகளுக்கு முதலீடு தொகை கூட கிடைக்காமல் போய் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே சின்னவெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுபோல் சின்னவெங்காயத்தை இருப்பு வைக்க குடோன் வசதி அமைக்க வேண்டும்.

மனோகரன்(தமிழக விவசாயிகள் சங்கம்):-

பி.ஏ.பி. முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு முதல் சுற்று முடிவடைந்துள்ளது. இந்த பாசனத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சரியாக வந்து சேரவில்லை.

கோடைகாலம் தொடங்கி விட்டதால் மாடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்கவில்லை. பி.ஏ.பி.பாசனத்தில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேர பாசனத்துறை அதிகாரிகள், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

செல்வன்(தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்):-

உடுமலை பகுதியில் 15 குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகிறோம். வனஉரிமை சட்டப்படி எங்களுக்கு தனிநபர் உரிமையும், சமூக உரிமையும் கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். வன உரிமை குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கோட்ட அளவிலான குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வன உரிமை கோட்ட அளவிலான குழுவில் வன கிராமங்களான மாவடைப்பு, காட்டுப்பட்டி, குழிப்பட்டி, குருமலை, திருமூர்த்திமலை, மேல்குருமலை, ஈசல்திட்டு ஆகிய குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கலாம் எனவும், பொன்னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரையும், கொங்குரார் குட்டையில் இருந்து ஈசல் திட்டு வரையும், சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை மாவட்ட அளவிலான குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபு, இணை இயக்குனர்(வேளாண்மை) மனோகரன், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவினாசியில் சாலை விபத்தில் பலியான 19 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story