இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் - கோவை கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி பேச்சு


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் - கோவை கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2020 4:30 AM IST (Updated: 22 Feb 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று கோவையில் நடந்த கல்லூரி விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

கோவை,

கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நேற்று காலை விமான நிலையத்தில் அவரை, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி. குழுமங்களின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிறுவனர் மற்றும் அறங்காவலர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அது வேலையை பெறுவதற்கானது மட்டும் அல்ல. அறிவை பெருக்குவதற்கானது. அதிகாரத்தை பெறுவதற்கானது. இறுதியில்தான் அது வேலைக்கானது. தற்போது வேலைக்கானதாக உள்ளது.

மாணவர்கள், தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு இருப்பதால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதேநேரம் சவால்களும் அதிகரித்துள்ளன. சவால்களை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள் கல்வியை மட்டும் வழங்காமல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பவையாக இருக்க வேண்டும். உடல் ரீதியான தகுதியுடன் இருக்க வேண்டும். அதன் பிறகுதான் மன ரீதியான திறனுடன் இருக்க முடியும். ஓட்டம், நீச்சல், யோகா என ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

பல குழந்தைகள் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுள்ளனர். துரித உணவு பழக்கம் சோம்பேறியாக்கிவிடும்.

யோகா மனம், உடல் இரண்டையும் ஒருமுகப்படுத்துகிறது. யோகாவுக்கு அரசியலுடன் தொடர்பில்லை. உங்களின் உடல் நலனுடன் தொடர்புடையது. எனக்கு 71 வயதாகிறது. ஒரு மணி நேரம் பேட்மிண்டன். 30 நிமிடம் நடக்கிறேன். பல மணி நேரம் தொடர்ந்து பேசுகிறேன். இது சமூக சேவை அல்ல. எனது உடலுக்கான சேவை. நீண்ட நாள் வாழ்வதை விட நீண்ட நாள் உடல் நலனுடன் வாழ்கிறோம் என்று இருக்க வேண்டும்.

இந்திய கல்வி முறை பண்பு, ஒழுக்கம், நேர்மையை போதிக்கிறது. நெறிமுறைகள், மதிப்புகளை இந்திய நாகரிகத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். நிறைய இளைஞர்களுக்கு கட்டபொம்மன், வ.உ.சி. பாரதியார், முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை பற்றி தெரியாது. வரலாறு, கலாசாரம், மரியாதை, பாரம்பரியம், நெறிமுறை, போன்றவற்றை இந்திய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பெரிய கனவு காண வேண்டும்.

கல்வி ஏழ்மையை ஒழிக்கும் கருவி. கோவையைச் சுற்றியுள்ள திருப்பூர், நாமக்கல், பொள்ளாச்சி, சேலம் ஆகிய நகரங்களில் ஏழ்மை குறைவு. ஏனெனில் கல்வி அறிவு அதிகமாகியுள்ளது. சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆனபின்னரும், நாடு 100 சதவீத கல்வி அறிவு பெறவில்லை. இது நமக்கு பெரிய சவாலாக உள்ளது.

நமது நாட்டின் மிகப் பெரிய பலம் இளைஞர்கள். அவர்களின் திறமை கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு வந்துதான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். முதலில் அரசியல் தெரிந்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் சிலரால் விதைக்கப்படுகின்றன.

வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாதது. அதை ஊக்குவிக்கக் கூடாது. போராட அனுமதி உள்ளது அரசுக்கு எதிராக பேச, அநீதிக்கு எதிராக பேச உரிமை உள்ளது. அதே சமயம் நாட்டு ஒற்றுமைக்கு எதிராக பேசக்கூடாது. மொழி, உடை, உணவு ஆகியவற்றில் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள். தமிழன் என்பதில் பெருமை தான். இந்தியன் என்பது தான் முக்கியம். ஒற்றுமை இல்லாததால் ஏற்கனவே நாட்டை இழந்தோம். மீண்டும் அதை அனுமதிக்கக் கூடாது. அதிகம் பொறுமையாக இருக்கக் கூடாது.

இந்தியாவில் 936 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் சில மட்டுமே தவறானதாக உள்ளன. மற்றவை நன்றாக செயல்படுகின்றன. நான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல. அனைத்தையும் கற்க வேண்டும். தாய் மொழி கண் பார்வையை போன்றது, மற்ற மொழிகள் கண் கண்ணாடியைப் போன்றது.

குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்களுக்கு எந்த விதத்திலும் எதிரானது இல்லை. அது குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாமலேயே சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்புகளை பதிவு செய்வதற்கும் எல்லா உரிமைகளையும் சட்டம் வழங்கியுள்ளது. ஆனால் ஒருபோதும் வன்முறையை அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களான காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை சில மேற்கத்திய நாடுகள் விவாதிக்க விரும்புகின்றன. ஆனால் பிரெக்சிட் போன்ற விவகாரங்களை நாங்கள் விவாதித்தால் என்னவாகும்.

எனவே இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம். தற்காலிக நடைமுறை 72 ஆண்டுகளாக இருந்தது. அரசியல் சட்டப்பிரிவு 370-க்கு அழுத்தம் தர முயன்றன சில அண்டை நாடுகள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. இதில் தலையிட சில நாடுகள் முயற்சித்தன. உங்கள் பிரச்சினைகளை நீங்கள் பாருங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story