பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை - கலெக்டர் தலைமையில் நடந்தது


பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை - கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Feb 2020 3:45 AM IST (Updated: 22 Feb 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வு நடத்துவது குறித்து கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

சிவகங்கை,

மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் மூலம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடு கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி மாவட்டத்திலுள்ள சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் தோ்வுக்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித்துறையுடன், காவல்துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் மற்றும் மருத்துவத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதில் 10-ம் வகுப்பு பொதுத்தோ்வு மாவட்டத்தில் 98 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை 9,070 மாணவர்கள், 9,026 மாணவிகள் என மொத்தம் 18,096 பேர் எழுதுகின்றனர். இதேபோல் 11-ம் வகுப்பு பொதுத் தோ்வுக்காக 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 7,124 மாணவா்கள், 8,938 மாணவிகள் என மொத்தம் 16,062 பேர் எழுதுகின்றனர்.

மேலும் 12-ம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக 72 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 7,172 மாணவா்கள், 9,131 மாணவிகள் என மொத்தம் 16,303 பேர் எழுதவுள்ளனர்.

தோ்வு மையங்களில் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தோ்வு நடைபெறும் போது பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், வருவாய்த்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள துணை ஆட்சியா்களை கொண்ட பறக்கும்படையினர் தோ்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் பாலுமுத்து, சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலா் அமுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Next Story