மாணவிகளுக்கான தொழில் நெறி கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


மாணவிகளுக்கான தொழில் நெறி கண்காட்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 7:43 PM GMT)

மாணவிகளுக்கான தொழில் நெறி கண்காட்சியை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மாணவிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்பு அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:- தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டுவதற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்த கல்லூரியில் நடைபெறும் கண்காட்சியில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி தேர்வுகள், காவல்துறை, ரெயில்வே துறை உள்ளிட்ட அனைத்து விதமான அரசு பணியிடத்திற்கான தேர்வுகளுக்கு மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

மாணவிகள் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்து அந்த துறையில் தங்களது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முழு அக்கறையுடன் செயல்படும் பட்சத்தில் எத்தகைய போட்டி தேர்வுகளையும் எளிதில் வெற்றி கொள்ளலாம்.

கற்றல் என்பது கல்லூரி படிப்போடு நின்று விடுவதல்ல. இளைஞர்கள் தொடர்ந்து பல்வேறு புதுமையான விசயங்களை கற்றறிந்து ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி வளமான சமுதாயத்தினை ஏற்படுத்திடும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கருணாகரன், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மதுக்குமார், அருண்நேரு, கல்லூரி முதல்வர் நாதிராபானு கமால் உள்பட அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story