டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாமா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாமா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:00 PM GMT (Updated: 21 Feb 2020 7:59 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. மதுரை மேலூரை அடுத்த எட்டிமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கின்பேரில் சிலரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஒரு பெண், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள்) முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்வில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு புரோக்கர்கள் உதவியுள்ளனர். குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஓம்கந்தன், ஜெயகுமார் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த முறைகேடுகளை சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story