தமிழகத்தில், பணம் இருப்பவர்களுக்கே படிப்பு, வேலை, மருத்துவம் சாத்தியமாகும் - திருச்சியில் முத்தரசன் பேட்டி


தமிழகத்தில், பணம் இருப்பவர்களுக்கே படிப்பு, வேலை, மருத்துவம் சாத்தியமாகும் - திருச்சியில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 8:30 PM GMT)

தமிழகத்தில் பணம் இருப்பவர்களுக்கே படிப்பு, வேலை மற்றும் மருத்துவம் சாத்தியமாகும் என்று திருச்சியில் முத்தரசன் தெரிவித்தார்.

திருச்சி,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நேற்று தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார், இந்திய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் திராவிடமணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜவகர், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சுரே‌‌ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது முத்தரசன் கூறியதாவது:-

இன்றைக்கு நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்பது வேலையின்மை ஆகும். நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடிக்கு மேல் பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்கான எவ்வித முயற்சிகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. மத்திய அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையானாலும் சரி, மாநில அரசு அண்மையில் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையானாலும் சரி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், அதற்கான திட்டங்களை நாங்கள் தீட்டுவோம் என வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சி, அதிகாரத்திற்கு வந்தார்.

5 ஆண்டுகள் ஆட்சி முடிந்து 2-வது முறையாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். அப்படியானால், 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 10 ஆயிரம் பேருக்குகூட வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. மத்திய, மாநில அரசு பணியிடங்களில் ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால், 2 விதத்தில் பாதிப்பு உள்ளது. ஒன்று, பணியில் இருப்பவர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிற காரணத்தால், அந்த இடத்திற்குரிய வேலைகளையும் இவர்களே செய்து மன உளைச்சலுக்கும், நெருக்கடிக்கும் ஆளாகி வருகிறார்கள். அடுத்ததாக, இடங்களை நிரப்புவதற்கு தடை இருக்கிற காரணத்தால் புதிதாக யாரும் வேலையில் சேரமுடியாமல் மிக மோசமான நிலைமை நீடித்து வருகிறது.

தமிழகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்மீது மக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது. அது இன்றைக்கு சீரழிந்துபோய் நிற்கிறது. அதில் நடைபெறுகிற முறைகேடுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இதில் கைதான அத்தனைபேரும் சுண்டெலிகள்தான். முறைகேட்டுக்கு காரணமானவர்கள் இதுவரை கண்டறியப்பட வில்லை. அவர்களை கண்டுகொள்ளவும் தயாராக இல்லை. இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

ஆகவே, இன்றைய நிலைமை என்னவென்றால், படிப்பு, வேலை, மருத்துவம் ஆகியவை பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். பணம் இருந்தால் வேலை வாங்கலாம், படிக்கலாம், மருத்துவம் பெறலாம் என்கிற மிக மோசமான ஒரு நிலை உருவாகி வருகிறது.

இதை எதிர்த்து வேலையின்மையை போக்குவதற்கும், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று முதல் (நேற்று) தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்துவதற்கான ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் இதற்கு நல்ல ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story